ஈரோட்டில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு கைதான சென்னை நபரை, போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சஞ்சய் வர்மா (43). இவர் கடந்தாண்டு அக்.8ம் தேதி, சேலத்தில் இருந்து கால் டாக்சியில் ஈரோட்டில் உள்ள ஓட்டல் பாருக்கு வந்து மது குடித்தார். கால் டாக்சி டிரைவர் மூலம் மது பாருக்கு பணம் செலுத்தினார். டிரைவருக்கு தன்னிடம் இருந்த ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டை கொடுத்து அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயன், விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து, கடந்த அக். இறுதியில் திருவனந்தபுரத்தில் அவரை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். அவரை நீதிமன்றம் மூலம் நேற்று கஸ்டடி எடுத்து ஈரோடு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், நேற்று மாலை மீண்டும் நீதிமன்றத்துக்கு சஞ்சய் வர்மா அழைத்து செல்லப்பட்டார். இவர் மீது தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கேரளா, ஆந்திராவில் கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.