சத்தியநாதேஸ்வரர் கோவில் பாழ் சீரமைக்கும் பணிகள் எப்போது?

உத்தரமேரூர் அருகே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை

Update: 2025-01-10 11:51 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காவாம்பயிர் ஊராட்சி, புத்தளி கிராமத்தில் மரகதாம்பிகை சமேத சத்தியநாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை காட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தற்போது, கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமலும், சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து உள்ளது. மூலவர் கட்டடம் முழுதும் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து வருகிறது. மேலும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றன. கோபுரத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: பழமை வாய்ந்த இக்கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவிலின் ஒவ்வொரு பகுதியும் சேதமடைந்து வருகிறது. சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. பல்வேறு வரலாற்று தகவல்களை கொண்ட கல்வெட்டுகளும் சேதமடைந்து வருகின்றன. எனவே, இக்கோவிலை சீரமைக்க, ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News