மீனவர்களிடையே மோதல், போலீசார் விசாரணை
மீனவர்களிடையே மோதல், போலீசார் விசாரணை
செய்யூர் அடுத்த ஆலம்பரைக்குப்பம் கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜித், 27, மாணிக்கம், தினேஷ், அகிலன் ஆகிய நான்கு பேரும், நேற்று காலை நாட்டுப்படகில், கடலில் மீன்பிடித்தனர். அப்போது இவர்களின் வலை, பரமன்கேணிகுப்பம் மீனவர்களின் வலையில் சிக்கியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மேற்கண்ட நால்வரையும், பரமன்கேணிகுப்பம் மீனவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த நால்வரும், மொபைல்போனில் இதுகுறித்து, தங்களது கிராமத்தினரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆலம்பரைக்குப்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள், படகில் பரமன்கேணிகுப்பத்திற்கு சென்று, அங்கு மீன்பிடித்து திரும்பிய அரிதாஸ், பொன்னன், ஏழுமலை ஆகிய மூவரை தாக்கி, படகுடன் ஆலம்பரைக்குப்பத்திற்கு அழைத்துச் சென்றனர்.இதையடுத்து, மேற்கண்ட 3 மீனவர்களையும் விடுவிக்க கோரி, பரமன்கேணிகுப்பம் மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சூணாம்பேடு போலீசார், ஆலம்பரைக்குப்பம் சென்று, அந்த மூன்று மீனவர்களையும் மீட்டு, பரமன்கேணிகுப்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 3 மீனவர்களையும் ஒப்படைக்க சென்ற போது, ஆலம்பரைக்குப்பம் மீனவர்களை, பரமன்கேணிகுப்பம் மீனவர்கள் மீண்டும் தாக்கி உள்ளனர். அப்போது சூணாம்பேடு, கூவத்துார் போலீசார், இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினர். இதுகுறித்து, சூணாம்பேடு மற்றும் கூவத்துார் போலீசார், தனித்தனியே வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.