சேலம் மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா

மாநகர காவல் ஆணையாளர் உற்சாக கொண்டாட்டம்

Update: 2025-01-12 10:48 GMT
பொங்கல் விழாவை அரசுத்துறை, காவல்துறை மற்றும் பல்வேறு துறை சார்பில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் காவல்துறை சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. அன்னதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமத்தில் இருப்பதைப் போன்று குடிசை வீடு, மாட்டு வண்டி, ஆடு, கோழி போன்றவை கிராமப்புறங்களில் உள்ளதை போன்றே அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மைதானம் முழுவதும் வண்ண வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவு தலைமை தாங்கினார். துணை ஆணையாளர்கள் உதவி, ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் என காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பெண்கள் பாரம்பரிய உடை அணிந்தும் , ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் வந்திருந்தனர். காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் மற்றும் அவரது மனைவி புதுப் பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி ஆயுதப்படை மைதானத்தை சுற்றி வந்தனர். தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் உரியடி நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைத்தார். தொடர்ந்து துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையில் பணிபுரியும் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சி சிறப்பாக நடனமாடிய குழந்தைகளுக்கு மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Similar News