அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போக்குவரத்தில் மாற்றம்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதால் நாளை 13 ம்தேதி முதல் அவனியாபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை குறித்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2025-01-12 13:40 GMT
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வருகின்ற 14.01.2025-ம் தேதியன்று மதுரை மாநகர் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதன் சுற்றுப்புறமுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள். மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடுவதை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படாதவாறும் இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் பொருட்டும் மாநகர காவல்துறை சார்பாக 13.01.2025-ம் தேதி காலை 09.00 மணிமுதல் விரிவான முறையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்கள் எதற்கும் அனுமதி இல்லை. திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும். திருப்பரங்குன்றத்திலிருந்து முத்துப்பட்டி சந்திப்பு வழியாக அவனியாபுரம் செல்ல வாகனங்கள் எதற்கும் அனுமதி இல்லை. இச்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வெள்ளக்கல் பிரிவு, கல்குளம், வெள்ளக்கல், அவனியாபுரம் பைபாஸ் ரோடு வழியாக மதுரை மாநகர் அல்லது பெருங்குடி செல்லலாம். ஹர்சிதா மருத்துவமனை மருதுபாண்டியர் சிலை சந்திப்பிலிருந்து அய்யனார் கோவில் வழியாக அவனியாபுரம் ஊருக்குள் செல்ல வாகனங்கள் எதற்கும் அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம். முத்துப்பட்டி சந்திப்பில் காளைகளை இறக்கிவிட்ட பின்பு வெள்ளைக்கல் வழியாக அவனியாபுரம் பைபாஸ் ரோடு சென்று வைக்கம் பெரியார் நகர் ரோடு மற்றும் வெள்ளக்கல் கிளாட்வே கிரவுண்டு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திட வேண்டும். மதுரை நகரிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை டி மார்ட் வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பெருங்குடி மற்றும் செம்பூரணி ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்களை K4 உணவகத்தின் அருகிலுள்ள வாகன நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் மற்றும் முத்துப்பட்டி மார்க்கமாக வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்களை திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள SPJ பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கு பெற்ற காளைகளை அவனியாபுரம் பைபாஸ் செம்பூரணி ரோடு சந்திப்பினில் தங்கள் வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். மேற்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் காளைகளை கொண்டு வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி அவனியாபுரம் ஜல்லிகட்டு விழாவினை சிறப்பாக நடத்திட மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News