கழிவுநீர் தேக்கத்தால் தொற்று அபாயம்
புளியம்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், பெரிய காலனி படவேட்டம்மன் கோவில் தெருவின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் குறிப்பிட்ட துாரம் வரை மட்டும் கட்டப்பட்டு, இடைபட்ட பகுதிகள் பட்டா நிலம் என்பதால் விடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து கால்வாய் வாயிலாக வரும் கழிவுநீர், வெளியேற வழி இல்லாமல் ஆங்காங்கே தேக்கமாகி காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, கொசு உற்பத்தி அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக அத்தெருவை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் புகார் கூறி வருகின்றனர். எனவே, கழிவுநீரை வெளியேற்ற புதிய கால்வாய் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புளியம்பாக்கம் கிராம வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.