சமூக விரோதிகளின் கூடாரம் சமூக வலைதளங்கள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்" - பாலபாரதி பேச்சு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க, திண்டுக்கல் மாநகர கிளை சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கவிவாணன் தலைமை வகித்தார். கவிஞர் தாமோ எழுதிய 'பகலைத்தொடாத வெளிச்சம்' என்ற நூலை வெளியிட்டு முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பேசுகையில், ''சமூக விரோதிகள் தற்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த நல்ல வார்த்தைகளும் வராது. அவர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. வலைதளத்தில் என்ன பதிவிட்டு இருக்கிறதோ அதை கண் மூடி பதிவிடுவதை வேலையாக வைத்திருக்கிறார்கள். பெண் கவிஞர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். ஒரு பெண்ணாக சமூக வலைதளத்துக்குள் நுழைந்தால் அவர் பெண்ணாக வெளிவர முடியாது. வன்முறைகள் வெளியே நடப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பெண்ணை மிகக் கேவலமாக சித்தரிப்பதும் பதிவிடுவதும் கூட ஒரு வகையான வன்முறை தான். ஒரு பெண்ணை பெண் என்ற காரணத்திற்காக இழிவுபடுத்துவது கொச்சைப்படுத்துவது அந்த சமூக வலைதளத்துக்குள் மதவெறி சக்திகள் இருக்கிறார்கள், சாதிய வெறியர்கள் இருக்கிறார்கள். இந்த சமூக வலைதளத்துக்குள் தான் நமது கருத்துகளையும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.இதுபோன்ற கவிஞர்களை கண்டறிந்து நாம் ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.