சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நாவலுாரில் சுகாதார சீர்கேடு
நாவலூர் கிராமத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் கிராமத்தில், பஜனை கோவில் தெரு, வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த ஆண்டு, 12.45 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் சாலையோரம் உள்ள திறந்த வெளி கால்வாயில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு கடி தொல்லையில் அப்பகுதியின் அவதி அடைகின்றனர். மேலும், திறந்த வெளி கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், பள்ளி, கல்லுாரிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமமடைந்தனர். எனவே, அப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.