மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது விசிக - பானை சின்னம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

Update: 2025-01-12 12:03 GMT
1999-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் திருமாவளவன். 2019 மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் மற்றும் பானை சின்னத்தில் போட்டியிட்டதால், இரு தொகுதிகளையும் வென்ற நிலையிலும், விசிகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் 5 சதவீத தொகுதியை வென்ற கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் என்ற அடிப்படையில் விசிகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, பானை சின்னம் வழங்கியுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலையிலேயே முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு, திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், விசிக தலைவர் திருமாவளவன், எம்எல்ஏ-க்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Similar News