சென்னையில் காணும் பொங்கலுக்கு 16,000 போலீஸார் பாதுகாப்பு
காணும் பொங்கலுக்கு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், சென்னை காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் 16,000 போலீஸார், 1,500 ஊர்காவல் படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை, 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள், 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள், 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள், ட்ரோன் கேமராக்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மெரினாவில் 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காணும் பொங்கலன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். 85 உயிர் காக்கும் பிரிவு போலீஸார் மூலம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிப்படும். இதேபோல், பெசன்ட் நகர் கடற்கரையிலும், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால், அவர்களை உடனடியாக மீட்க, கைகளில் பேண்ட் கட்டப்படும். அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி எழுதப்படும். இதேபோல், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.