பூக்கள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் சாமான்கள் விலை கடும் உயர்வு
கடன் வாங்கி தான் பொங்கல் கொண்டாட வேண்டும் - இல்லத்தரசிகள் புலம்பல்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மக்கள் சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், பொங்கல் பண்டிகையொட்டி மங்களம் தரும் மஞ்சளை வாங்கவும், கரும்பு மற்றும் பொங்கல் பொருட்களை வாங்குவதற்காகவும் மக்கள் கடைவீதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால், நாகை மாவட்டத்தை பொறுத்தவரை, எதிர்பார்த்த விற்பனை இல்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூட்டம் குறைவாக இருப்பதாகவும் நாளை போகி பண்டிகை மற்றும் நாளை மறுநாள் பொங்கல் அன்று காலை ஓரளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாகை மட்டுமின்றி, நாகை, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம், கடைவீதிகளில் குறைவாகவே உள்ளது. கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் அதிக முதலீடு செய்து இறக்குமதி செய்து வருகின்றனர். பூக்களின் விலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மும்மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நேற்றைய தினம் 1 கிலோ செவ்வந்தி ரூ.160 விற்ற நிலையில் இன்று ரூ.260க்கு ம், அரளி நேற்று ரூ.300க்கு விற்ற நிலையில், இன்று ரூ.400க்கும், காக்கரட்டை நேற்று ஒரு கிலோ 600 க்கு விற்ற நிலையில் இன்று 800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர். கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்துள்ள பெரும்பாலானோர் கடன் வாங்கியே பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலை உள்ளது என இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டு வியாபாரம் குறைவாகவே இருக்கிறது. அதற்கு விலை உயர்வு தான் காரணம் என ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் என மிக சில வியாபாரிகள் ஒப்புக்கொள்கின்றனர்.