சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகள் பொறித்த மஞ்சள்பை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினார்கள்.;
பெரம்பலூர் மாவட்டம் சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று (13.01.2025) கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு 01.01.2025 முதல் 31.01.2025 வரை மாவட்ட அளவிலான பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி பயிற்றுநர்கள் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை நிலைய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழ்நாட்டை படைப்போம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டாதீர், பேருந்தில் படியில் நின்று பயணம் செய்யாதீர், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்காதீர் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி ரோவர் ஆர்ச் வரை சென்று முடிவுற்றது. அதனைத்தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகள் பொறித்த மஞ்சள்பை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) கே.ரவி, மோட்டார் வாகன ஆய்வாளர் அ.ராஜாமணி, கிறிஸ்டியன் நர்ஸிங் கல்லூரி மாணவிகள், ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.