ஊக்க தொகை வழங்காததால் கரும்பு விவசாயிகள் தர்ணா
ஊக்க தொகை வழங்காததால் விவசாயிகள் தர்ணா;
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் கலிவரதன் தலைமையில் செயலாளர் முருககையன், பொருளாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர், நேற்று காலை 11.00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தனர். இங்கு, அவர்கள் கொண்டு வந்த கரும்புகளோடு திடீர் தர்ணா செய்தனர்.அப்போது அவர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள், முண்டியம்பாக்கம் சக்கரை (ராஜ்ஸ்ரீ சுகர்ஸ்) ஆலைக்கு 2024-25ம் ஆண்டு கொள்முதல் செய்த கரும்புகளை வழங்கினர்.இதில், 310 விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் டன்னிற்கு 215 ரூபாய் என ஊக்க தொகை, சிறப்பு ஊக்க தொகை என மொத்தம் ரூ.76 லட்சத்தை தற்போது வரை வழங்காமல் உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த பணத்தை உடனே வழங்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மதியம் 1.00 மணிக்கு மேல் கலைந்து சென்றனர்.விவசாயிகளின் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.