வேன் மோதி பூசாரி பலி உறவினர்கள் சாலை மறியல்
ஸ்ரீபெரும்புதூர்ல அருகே வேன் மோதி பூசாரி உயிரிழப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல்
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராகவன், 76; பூசாரி. வல்லம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள, ஓசூர் அம்மன் கோவிலில், 20 ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று காலை 7:30 மணிக்கு, கோவிலில் பூஜை செய்துவிட்டு, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையை கடக்க முயன்ற போது, ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்ற தொழிற்சாலை வேன், பூசாரி மீது மோதியது. இதில், துாக்கிவீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாவும், போலீசார் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறி, இறந்தவரின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரகடம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சமாதானம் அடைந்த போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.