திருக்கோவிலுாரில் ஆற்றுத் திருவிழா நடத்துவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் பண்டிகை அடுத்து ஆண்டு தோறும் ஆற்று திருவிழா நடப்பதும் வழக்கம். இந்த ஆண்டு வரும் 18ம் தேதி ஆற்று திருவிழா நடைபெறும் நிலையில், ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 600 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக விழா நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.விழாவை பாதுகாப்பான வகையில் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆற்றில் எந்தப் பகுதியில் குறைவாக தண்ணீர் செல்கிறது என்பதை கண்டறிந்து, அந்தப் பகுதியில் பொதுமக்கள் சென்று வர வழியை ஏற்படுத்துவது. சுவாமி எழுந்தருள பந்தல் அமைக்கும் இடம் குறித்து நேரடியாக ஆற்றுக்கு சென்று ஆய்வு செய்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து துறை அலுவலர்கள் இன்று ஆற்றில் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என, வருவாய்த்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.