கோவை: கோமாதா பூஜையுடன் சமத்துவ பொங்கல் விழா !
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா விமரிசியாக கொண்டாடப்பட்டது
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா விமரிசியாக கொண்டாடப்பட்டது. காவல் துறையினர் காவல் நிலைய வளாகத்தில் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவலர்கள் மாட்டு வண்டியில் அழைத்து வந்தும், நடிகர் விஜயகாந்தின் நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற திரைப்படப் பாடலை ஒலிக்கவிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க சூரிய வழிபாடு மற்றும் கோமாதா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினருக்கு தேங்காயில் கற்பூரம் வைத்து சுற்றி போட்ட புரோகிதர் அதனை உடைத்து திருஷ்டி கழித்தார். பின்னர் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனம் மற்றும் காவடியாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் வள்ளி கும்மி நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.