குமரி மாவட்டம் குளச்சல் அருகே பத்தறை காலனியை சேர்ந்தவர் சந்திரன் (58). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (54)அருகில் உள்ள ஒரு சத்துணவு மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது குடிசைக்கு மின் இணைப்பு இல்லை. இதனால் இவர்கள் சாமி படத்திற்கு ஏற்றி வைக்கும் விளக்கை வெளிச்சமாக பயன்படுத்தி வருகின்றனர். நேற்று அங்கு ஊரில் பொங்கல் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள சாந்தி நேற்று மாலை குடிசையில் சாமி படத்திற்கு வழக்கம் போல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சென்றார். இரவு 9 மணி அளவில் இவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தகவல் அறிந்து சாந்தி குடிசைக்கு விரைந்து வரும்போது குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் குடிசையில் இருந்த உபயோகப் பொருட்கள் அனைத்தும் நாசமானது. இந்த தகவல் அறிந்ததும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால், ரீத்தாபுர பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். சந்திரன் - சாந்தி தம்பதியினர் அங்குள்ள சமூக நலக்கூடத்தில் இரவு தங்க வைக்கப்பட்டனர். தீ விபத்தில் குடிசை இழந்தவர்களுக்கு உடனே வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.