குமரி பாஜக புதிய தலைவர்கள் நியமனம்: குற்றப் பின்னணி இல்லாதவர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட பாஜகவுக்கு கிழக்கு, மேற்கு மாவட்ட புதிய தலைவர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். பொது வாழ்க்கையில் நேர்மை உடைய குற்ற பின்னணி இல்லாதவர்களை தேர்வு செய்ய கட்சியினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அனைத்து கட்சியினரும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என பல கட்சியினரும் பணிகளை முடிக்கிவிட்டிருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ள பாஜகவும் சட்டப்பேரவை தேர்தலில் இடங்களை பிடிக்கும் வகையில் வியூகம் அமைத்து வருகிறது. இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி பாஜக கிழக்கு, மேற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 3 தொகுதிகள் கிழக்கு மாவட்டமாகவும், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் பிரித்த இரு தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஏற்கனவே குமரி மாவட்ட பாஜக தலைவராக உள்ள தர்மராஜின் பதவி காலம் முடியவுள்ளது. புதிதாக கிழக்கு மாவடட்டத்துக்கும், மேற்கு மாவட்டத்துக்கும் பாஜகவில் உள்ள சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவை கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கட்சிக்காக உழைக்காமல் கட்சியின் பெயரை வைத்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாக உள்ள சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பாஜகவினரின் விமர்சனம் வைரலாக பரவி வருகிறது. பொது வாழ்க்கையில் நேர்மை இல்லாதவர்கள், மற்றும் கட்டப்பஞ்சாயத்து, மோசடியுடன் குற்றப் பின்னணிகள் உடையவர்களை தேர்வு செய்வதற்கு குமரி மாவட்டத்தில் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகளே, கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்திருப்பது ஏற்கதக்கதல்ல. இதுபோன்று நேர்மையற்றவர்கள் பாஜகவில் தலைவர்களாக வந்தால், வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது சிரமம். பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள குமரி மாவட்டத்தில் கட்சி செல்வாக்கு பாதியாக சரிவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே நேர்மையானவர்களை குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்தனர்.