திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பெருங்குடி, காந்திநகர் பகுதியை சார்ந்த கோபால் என்பவர் மகன் சுடர்மணி (24). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயிடம் அடிக்கடி கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மாலை 5.15 மணி அளவில் குமரி மாவட்டம் காவல்கிணறு - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் அன்னத்துகுளம் அருகே சுடர்மணி தன்னை தானே தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தை பொறுக்க முடியாத சுடர்மணி நான்கு வழிச்சாலையில் அங்கு இங்குமாக ஓட தொடங்கினார். அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவரது உடலில் தீயானது வேகமாக பற்றி எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று 15-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி அவரது தாயார் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.