பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்
திருச்சி தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம அடி;
திருச்சி பெரிய கடை வீதி அருகே 20வது வார்டுக்கு உட்பட்ட மளிகைக்கார தெரு, ராணி தெரு, வடக்கு ராணி தெரு, சௌராஷ்ட்ரா தெரு, சுண்ணாம்பு கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் 20வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் எல்ஐசி சங்கர் இடம் தெரிவித்தும் இதுவரை குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டாலும் ஆளும்கட்டியினரின் சிபாரிசால் சுலபமாக பிணையில் வந்து மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெரிய கடையில் பெரிய சௌராஷ்டிரா தெருவில் எதிரே தள்ளுவண்டியில் வாழைப்பழங்கள் விற்பனை செய்து வந்த முதியவரிடம் 6 இளைஞர்கள் கஞ்சா போதையில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அருகே இருந்த பொதுமக்கள் தட்டிக்கேட்டதால் அங்கிருந்து அந்த இளைஞர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். 4 பேர் தப்பி ஓடிய நிலையில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்பு பாறை பகுதியை சேர்ந்த மரிய ஜேகப், பரத் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடிபட்டனர். அந்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் சூழ்ந்து தர்ம அடி கொடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கோட்டை காவல்துறையினர் இரத்தம் சொட்ட சொட்ட இருந்த அந்த இளைஞர்களை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் காந்தி மார்க்கெட் அருகே உள்ள இந்த பகுதியில் கத்தியை காட்டி இளைஞர்கள் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க இரவு 2 மணியளவில் அந்த பகுதிக்கு அருகே உள்ள சுண்ணாம்பு கார தெருவில் வீட்டிற்குள் புகுந்து 2 செல்போன் திருடப்பட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது.