தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

நமது இந்திய நாட்டின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் முதல் தற்போதைய குடியரசு தலைவர் திரபெளதி முர்மூ வரையிலான குடியரசு தலைவர்கள் வரை அனைத்து குடியரசு தலைவர்களை பற்றியும் அவர்களின் சாதனைகளையும் காட்சி படுத்தியிருந்தனர்.;

Update: 2025-01-26 05:24 GMT
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின கொண்டாட்டம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 76 வது குடியரசு தினவிழா ஜனவரி 26-ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் திரு. அ. சீனிவாசன் அய்யா அவர்கள் தலைமை வகித்து, குடியரசு தின உரையாற்றினார். அப்பொழுது பேசியதாவது: நமது பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு, குடியரசு தின உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். முதலாவதாக என்னுடைய இதயப்பூர்வமான குடியரசு தின நல்வாழ்த்துக்களை ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நமது நாடு சுதந்திரம் பெற்றது அதனை கொண்டாடும் வகையிலும் மேலும் அந்த சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று நாம் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் 15,1947 இல் நமது நாடு சுதந்திரம் பெற்றது, ஆனால் 1950 இல் நாட்டின் அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை அது குடியரசாக இருக்கவில்லை. நமது தனித்துவமான சமூக, கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தவும், நிர்வகிக்கவும் ஒரு விரிவான மற்றும் திறன்மிக்க அரசியலமைப்பு சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை தலைவராக கொண்ட குழு உருவாக்கியது. அதனால்தான் இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் சிற்பியாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் கருதப்படுகிறார். இந்திய அரசியலமைப்பு சபை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது, அது ஜனவரி 26 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. நமது நாடு குடியரசு நாடாக நடைமுறைக்கு வந்த அந்த நாளை நாம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, "இந்தியா ஒரு இறையாண்மை உள்ள, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு, அதன் குடிமக்களுக்கு நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை அது உறுதிப்படுத்துகிறது. ஒரு மரம், அதன் கனிகளை மட்டுமே கொடுப்பதால் போற்றப்படுவதில்லை, அதன் நிழலை பெருங்கொடையாக எல்லோருக்கும் வழங்குவதாலேயே போற்றப்படுகிறது. அதேபோல, மனிதன் தன்னுடைய ஆளுமையாலும் பண்பாலும் மட்டுமே மரியாதைக்குரியவனாக போற்றப்படுகிறான், அவன் வைத்திருக்கும் செல்வங்களால் மட்டுமல்ல, என்பதை மாணவர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சிறக்கும், ஆனால் அன்பு மற்றும் கருணையால் மட்டுமே உலகம் வாழும். இன்றைய மாணவர்களாகிய நீங்கள்தான் நாளைய தலைவர்கள், நிர்வாகிகள், இந்திய அரசிலைப்பு சட்டத்தை பாதுகாத்து அதன்படி நாட்டை சிறந்த முறையில். வழிநடத்தி மக்களுக்கு நீதி, சமத்துவம், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி நமது நாடு ஒரு மதசார்பற்ற நாடு நமது நாட்டில் பல்வேறு மதங்கள், ஜாதிகள் இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் வேற்றுமையில் ஒற்றுமையை கடைபிடித்து சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதே நமது நாட்டின் அழகு மற்றும் பெருமையுமாகும். இதைபாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். நமது நாட்டின் வளர்ச்சிக்கு, பாதுகாப்புக்கு பங்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நமது நாட்டை வடிவமைப்பதில் நாம் ஒவ்வொருவரும் முக்கிய பங்கு வகிக்கிறோம். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், உங்கள் முயற்சி சமூக நலனுக்காக இருக்க வேண்டும். உங்கள் வெற்றி என்பது வெறும் உங்கள் வாழ்வை மாற்றுவதாக மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்படி இருக்கவேண்டும். நம் வாழ்க்கையின் நோக்கம் எப்போதும் உயர்ந்ததாக இருக்க வேண்டும், மற்றவர்களின் நலனில் ஒளிவிளக்காக திகழ வேண்டும். நமது செயல்கள் மற்றவர்களுக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது திறன்களை சமூக நலனுக்காக பகிர்ந்து கொள்ளும்போது, அது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். நமது எண்ணம், சிந்தனை நன்றாக இருந்தால், நமது செயல்கள் எப்போதும் சிறப்பாகவும், நன்றாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் புத்திசாலித்தனமான மாணவர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மனிநேயமுள்ள, இரக்கமுள்ள நல்ல இதயங்களையும் உருவாக்குகிறோம் என்று நம்புகிறோம் மாணவர்களாகிய நீங்கள்தான் நாளைய தலைவர்கள், எனவே எந்த சூழலிலும் சமூக பொறுப்புடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த குடியரசு தினத்தில், ஒவ்வொரு தனிமனிதனும், தன்னுடைய வாழ்வில் வளரவும், பொருளாதாரத்தில் செழிக்கவும் சம வாய்ப்புகள் உள்ள, உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசத்தை கட்டமைக்க உறுதிமொழி எடுப்போம். வெறுப்பு மற்றும் வேறுபாடுகளை கடந்து அன்பு, பாசம் ,கருணை மிக்க சமூகத்தை வளர்க்க உறுதி ஏற்போம். எனவே, எப்பொழுதும் அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் மரியாதையுடன் பழகுங்கள். இந்தியாவின் மாறுதல் இளைஞர்களின் கைவசம் உள்ளது.ஏனெனில் உங்களது முயற்சிகளின் மூலம் தான் நம் நாட்டின் எதிர்காலம் மாறும். உலகின் தொன்மை வாய்ந்த கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் நிறந்த இந்த திருநாட்டில் இன்று அறிவியல் பொருளாதாரம் தொழில் கல்வி விவசாயம் மருத்துவம் தொழில்நுட்பம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றோம். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எதிர்காலம். உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்கள் நம்முடைய தேசத்தை மிகச்சிறந்த தேசமாக மாற்றும் சக்தியை கொண்டிருக்கவேண்டும். விடாமுயற்சியுடன், எப்பொழுதும் நேர்மையுடன் உழையுங்கள், வெற்றி உங்களை அடைந்தே தீரும். சுயநலத்திற்காக சுயமரியாதையை இழந்து, தன்மானத்தை இழந்து நேர்மையற்ற முறையில் குறுக்குவழியில் முன்னேற முயற்சி செய்யாதீர்கள். அப்படி பெற்ற வெற்றி அது வெற்றியும்மல்ல அது நீடித்திருப்பதும்மில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்து, அவர்களின் வாழ்வில் வளம்பெற கலங்கரை விளக்கமாக வழிகாட்டிவரும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் நமது இந்திய நாட்டின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் முதல் தற்போதைய குடியரசு தலைவர் திரபெளதி முர்மூ வரையிலான குடியரசு தலைவர்கள் வரை அனைத்து குடியரசு தலைவர்களை பற்றியும் அவர்களின் சாதனைகளையும் காட்சி படுத்தியிருந்தனர். நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் மாணவ மாணவியரின் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாநில , தேசிய அளவில், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்த மாணவ மாணவிகள் அய்யா அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். அப்பொழுது அய்யா அவர்கள் தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலர் நீலரஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரியின் நிர்வாக இயக்குனர்கள் நீவாணி கதிரவன், நகுலன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் நிதி அலுவலர் ராஜசேகர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் கல்விநிறுவங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், புலமுதல்வர்கள், மருத்துவர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News