குடிநீருக்கு தவிக்கும் துவாக்குடி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

குடிநீா் வழங்காமல் காலதாமதம் செய்வதாக துவாக்குடி நகராட்சி நிா்வாகத்தின் மீது பரக்கத் நகா் குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்;

Update: 2025-01-28 10:01 GMT
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த மக்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக, பரக்கத் நகா் பகுதியைச் சோ்ந்த 50 குடும்பங்களுடன் ஆட்சியரகத்துக்கு நேரில் வந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கே. பழனிசாமி அளித்துள்ள மனு: துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட பரக்கத் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் அனைவரும் சாலையோர மற்றும் தள்ளு வண்டி வியாபாரம் செய்யும் அன்றாட கூலித் தொழிலாளா்கள். இப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா, வீட்டு வரி, குடிநீா் வரி கோரி வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் பலன் இல்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இப் பகுதி மக்களுக்காக பொது குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது. இதுநாள் வரை இந்த பொது குழாயில் குடிநீா் பெற்று தங்களது தேவையைப் பூா்த்தி செய்து வந்தனா். ஆனால், துவாக்குடி நகராட்சியானது ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்குவதாகக் கூறி இரு மாதங்களுக்கு முன், பொதுக் குழாயை அகற்றிவிட்டனா். இதனால், கடந்த 2 மாதங்களாக இப் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடி வருகின்றனா். எனவே, உடனடியாக குடிநீா் வழங்க ஆவன செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News