கோடியக்கரைக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவு வழங்காமல் இருக்க
வனத்துறையினர் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே நின்று கண்காணிப்பு;

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில், தை அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை தந்தனர். புனித நீராட வாகனங்களில் வருகை தந்த பக்தர்களை, ராமர் பாதம் அருகே உள்ள வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வனத்துறையின் சார்பில், குரங்குகளுக்கு உணவு, தின்பண்டம் வழங்கக் கூடாது. வாகனங்கள் செல்லும்போது உணவு பொட்டலங்களை வீசுவதால் அருகில் வரும் குரங்குகள், பின்னால் வரும் வாகனங்களில் அடிபட்டு இறக்க நேரிடும். குரங்குகளுக்கு உணவு வழங்குவது வனத்துறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவுரை கூறினர். மேலும், ராமர் பாதம் முதல் கோடியக்கரை பேருந்து நிலையம் வரை, சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனத்துறையினர், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் டோமர் ஆலோசனையின் பேரில், கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் இளஞ்செழியன் ஆகியோர் ஆங்காங்கே நின்று, குரங்குகளுக்கு உணவு வழங்காமல், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், சமூக ஆர்வலர் அனந்தராமன் துண்டு பிரசுரங்கள் அடித்து கோடியக்கரைக்கு வருகை தந்த பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வழங்கினார். பள்ளி மாணவர்கள் பதாகை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால், வழக்கமாக கடலில் புனித நீராட வரும் பக்தர்கள் ஆங்காங்கே குரங்குகளுக்கு திண்பண்டங்கள்,உணவு வழங்குவது நடப்பாண்டு முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இதனால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.