பையூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோயிலுக்கு சொந்தமான

நிலத்தின் வாடகை பல மடங்கு உயர்வு - மூன்று தலைமுறையாக குடியிருந்தோர் அதிர்ச்சி;

Update: 2025-02-07 08:49 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா பையூர் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில், 3 தலைமுறையாக வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். வருடாந்திர வாடகை சரியாக செலுத்தி வந்ததாகவும், கொரோனா காலகட்டத்தில் வாடகை செலுத்திய போது, பின்னர் வாங்கிக் கொள்வதாக தெரிவித்ததால், கடந்த சில ஆண்டுகளாக வாடகை கட்டாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த 2024 -ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி 15 மடங்கு வாடகையை உயர்த்தி உடனடியாக கட்ட வேண்டும் என கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்யும் தங்களால் இவ்வளவு வாடகை கட்ட முடியாது. வாடகையை குறைக்க வேண்டும் என ஒரு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் அலுவலர்கள் பையூர் கிராமத்தில் குடியிருப்பு வீடு மற்றும் பயன்பாட்டில் உள்ள இடங்களை அளவீடு செய்தனர். அப்போது, 500 சதுர அடி முதல் 800 சதுர அடி வரை கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு பல மடங்கு கூடுதலாக வாடகை செலுத்த வேண்டும் என நிர்பந்திருப்பதாகவும், தற்போது பன்மடங்கு கூடுதலாக வாடகை நிர்ணயம் செய்து கட்ட தவறினால் நீதிமன்ற ஆணைப்படி வீடுகளை ஜப்தி செய்து சீல் வைப்போம் என மிரட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். குடியிருக்கும் கோயில் இடங்களுக்கு திமுக ஆட்சி காலத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய பட்டாக்களும் செல்லாது என அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தெரிவித்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கை கண்டித்து, திருக்குவளை- கச்சனம் சாலையில் பையூர் கிராமத்தில் அவர்களது வீட்டின் முன், கருப்பு கொடியை கட்டி, இப்பிரச்சினையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு வழக்கமான வாடகையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News