ஊழியர்களின் பணத்தை எடுத்து கையாடல் செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி குறித்து அரசு ஊழியர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு;

Update: 2025-02-07 14:44 GMT
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில், மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல், நாகை வட்டத் தலைவர் கே.ரவிச்சந்திரன், வட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் ஆகியோர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சந்தித்து, நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர்கள் பிரச்சினை தொடர்பாக மனு அளித்தனர். மனுவில் கூறி இருப்பதாவது நாகை நகரில், 1958-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் மிகவும் பயன்பெற்று வந்த மற்றும் வரும், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, தற்போது மிகவும் மோசமான நிலையில் நடந்து வருகிறது. அரசு உதவிபெறும் தொழில்நுட்ப கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 96 -ல் 33 பணியிடங்களில் மட்டுமே பயிற்றுனர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளனர். 63 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் அதிக வேலைப்பளுவால் பணியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். இத்தகைய சூழலில் பணியில் உள்ளவர்கள் பணியாற்றிய காலத்திற்கான ஊதியம் முறையான காலத்தில் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக ஆகஸ்ட் 2024 முதல் ஜனவரி 2025 வரை எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 6 மாதங்கள் ஊதியம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவது எத்தனை துன்பமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சேமநலநிதி பணம் 83 மாதங்களாக அரசு கணக்கில் செலுத்தப்படவில்லை. இதர பணியாளர்களுக்கு இதே சேமநலநிதி 5 மாதங்களாக அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படாததால், ஊழியர்கள் அவசர மற்றும் அவசிய தேவைகளுக்கு முன்பணம் பெறுவது இயலாததாக உள்ளது. மேலும், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வட்டியும் கிடைப்பது தடுக்கப்படுகிறது. அதேபோல், பணிநிறைவு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. எனவே, தாங்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 மாத ஊதியம் உடனடியாக வழங்கப்படுவதையும், சேமநலநிதி கணக்கில் தொகை செலுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். பணிநிறைவு பெற்றவர்களுக்கு ஒப்படைப்பு விடுப்பு காசாக்கி தரவேண்டும். அதேபோல், ஊழியர்களின் பணத்தை எடுத்து கையாடல் செய்துள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Similar News