ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி*
ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.;
அரியலூர், பிப்.17- ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ பேரணி மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.தீபக் சிவாச் அறிவுறுத்தலின் பேரிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் வழிகாட்டுதலின்படி, 136-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்று சக்கர ஆட்டோ பேரணி நேற்று நடைபெற்றது.ஜெயங்கொண்ட நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் ஜெயங்கொண்டம் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்று ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு தொடங்கி அண்ணா சிலை வழியாக சென்று ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகர சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள்,கார் ஓட்டுநர்கள்,வேன் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் விபத்து நேரத்தில் மக்களுக்கு உதவிய, தங்களது வாகனத்தில் தவறவிட்ட பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனர்களை பாராட்டி அவர்களுக்கு நற் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.மேலும் காவல் உதவி செயலி குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி மற்றும் போக்குவரத்து போலீசார்கள் உடன் இருந்தனர்..