வியாபாரம் டல்

வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை வெறிச்சோடியது;

Update: 2025-02-19 09:07 GMT
ஈரோடு ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றதாகும். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் துணிகளை ஒட்டுமொத்தமாக வாங்கி செல்கின்றனர். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் வெளிமாநில வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வருவதை குறைத்துக்கொண்டனர். மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லரை விற்பனை ஓரளவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தல் முடிவடைந்து எப்போது போல் வியாபாரம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த வாரம் வியாபாரம் மந்தமாக இருந்தது. இதை அடுத்து நேற்று இரவு வழக்கம்போல் ஜவுளி வார சந்தை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகள் ஜவுளிக்கடைகளை அமைத்திருந்தனர். ஆனால் வழக்கம்போல் வெளியில் மாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகளும் ஒரு சிலர் மட்டுமே வந்து துறைகளை வாங்கிச் சென்றனர். இதனால் இன்று நடந்த ஜவுளி வார சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது,இடைத்தேர்தல் காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக இருந்தது. தற்போது தேர்தல் முடிந்து இயல்பு வந்துவிட்டது. இருந்தாலும் இந்த வாரமும் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் 10 சதவீதம் மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்று உள்ளது. கல்யாண விசேஷங்கள் இருப்பதால் சில்லறை விற்பனை 20 சதவீதம் நடைபெற்று உள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் கோடை காலம் தொடங்க உள்ளதால் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Similar News