போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே மலைப்பாதையில் குட்டியுடன் வந்த யானை காரை வழிமறித்ததால் பரபரப்பு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், தாளவாடி, ஆசனூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என பார்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து தாளவாடி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆசனூர் மலைப்பாதை வழியாக கார் சென்றபோது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று தனது குட்டியுடன் காரை வழிமறித்து நின்றது. சாலையில் குட்டியுடன் யானை நின்றதால் அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர் காரை சற்று தொலைவில் நிறுத்தினார். காரை நோக்கி யானை வந்ததால் உரிமையாளர் காரை பின்னால் மெது மெதுவாக நகர்த்தி சென்றார். சிறிது தூரம் காரை உரிமையாளர் பின்னால் இயக்கினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் யானை குட்டியுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து கார் உரிமையாளர் அந்த பகுதியை கடந்து சென்றார். அதைத்தொடர்ந்து மற்ற வாகனங்களும் கடந்து சென்றன. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி வழியாக யானைக் கூட்டங்கள் இடம்பெயர்ந்து வருகிறது. குட்டியுடன் வரும் யானையை வாங்குன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. சிலர் யானைகளை தங்கள் செல்போனில் படம் பிடிக்கின்றனர். இது தவறு. இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசனூர் மலைப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.