மொபைல் வாகனம்

ஈரோடு மாநகராட்சியில் மொபைல் வாகனம் மூலம், இன்று முதல் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2025-02-19 12:46 GMT
ஈரோடு மாநகராட்சியில் 2024 2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. வரும் மார்ச் 31க்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக, மாநகராட்சியில் உள்ள வரி வசூலிப்பு மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி பே, போன் பே ஆகிய செயல்களில் மூலமாகவும் வரியினங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பவர்கள் மூலம் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ஜப்தி அறிவிப்புகள் வழங்கியும், அதன் தொடர்ச்சியாக வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. இந்நிலையில், மாநகராட்சியில் மொபைல் வாகனம் மூலம், இன்று முதல் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : ஈரோடு மாநகராட்சியில் தினசரி ஒரு வார்டு வீதம், மொபைல் வாகனம் மூலம் இன்று முதல் வரி வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு, வாகனத்திலேயே ரசீதும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களின் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால், அவர்களுக்கான நேரத்தை மிச்சமாக்குகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News