போக்குவரத்து மெர்சல்
திம்பம் மலை பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் -கர்நாடகா இடையிலான முக்கிய போக்குவரத்து வழிப்பாதையாக, தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அனைத்து கொண்டை ஊசி வளைவுகளுமே டிரைவர்களுக்கு சவாலானவை. சமீப காலமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும் கனரக வாகனங்கள் திடீரென பழுதாகி நிற்பதாலும், லாரிகள் விபத்தில் சிக்குவதாலும் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதை ஆகி வருகிறது. கனரக வாகங்கள் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக லோடுகளை ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கனரக வாகனங்கள் 16.2 டன் வரை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில் ஆசனூரில் எடை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் எடை போட்ட பிறகு திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கறாராக இருந்ததால் மலைப்பாதையில் விபத்து குறைந்தது. போக்குவரத்தும் தடைப்படவில்லை. சில மாதங்களாக மலை பாதையில் மீண்டும் விபத்து அதிகரித்து விட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது திம்பம் மலைப்பகுதியில் தினமும் நடக்கும் தொடர் கதையாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழகம் கர்நாடக இடையே கிட்டத்தட்ட 3 மணி முதல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் நிற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதேபோல் காலை நேரத்தில் ஒரே சமயத்தில் ஆசனூரில் இருந்தும் பண்ணாரியிலிருந்தும் திம்பம் மலைப்பாதைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒரே நேரத்தில் வாகனங்கள் அனுமதிப்பதை தடுக்க வேண்டும். அதேபோல் அதிகம் எடைகளை ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணித்து அபராதம் இருக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.