சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திம்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வெளி மாநில பயணிகளுக்கு வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை;
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.மனித வனவிலங்கு மோதலை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் திம்பம், ஆசனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் -கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சாலையில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வன விலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதும் அவ்வபோது சாலையை கடந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வெளியூர் நபர்கள் ஆபத்தை உணராமல் யானையின் அருகே சென்று செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனவிலங்கு -மனித மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. எங்களது கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஆபத்தை உணராமல் சாலையில் நடமாடிய யானையின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வெளியூர், வெளி மாநில பயணிகளுக்கு வனத்துறையினர் வனவிலங்கு நடமாட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:- சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஓட்டி வசிக்கும் மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது யானைகள் நடமாட்டத்தை கண்டால் வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் காத்திருந்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் பாதுகாப்பாக செல்கின்றனர் ஆனால் வெளியூரை சேர்ந்த நபர்கள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஆபத்தை உணராமல் காட்டு யானைகளின் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இச்சாலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது. வெளிமாநில பயணிகள் ஆபத்தை உணராமல் யானை அருகே செல்கின்றனர். இதனால் வனவிலங்கு -மனித மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண்ணாரி சோதனை சாவடி மற்றும் காரப்பள்ளம் சோதனை சாவடியில் பணியில் உள்ள வனத்துறை ஊழியர்கள் சோதனை சாவடி வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் வெளியூர் வெளிமாநில பயணிகளிடம் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து அறிவுறுத்திய பின் அந்த சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.