கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா தலைமையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை இன்று (21.02.2025) ஏற்றுக்கொண்டார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என அனைவரும் ஏற்றுகொண்டார்கள். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், அலுவலக மேலாளர் சுப்பிரமணியன் (நீதியியல்), தனி வட்டாட்சியர் (பேரிடர்) சுசிலா, அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.