நகை திருட்டு
ஈரோட்டில் அதிகாலையில் பரபரப்பு வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி தங்கத்தோடை திருடி சென்ற பெண் போலீசார் விசாரணை;
ஈரோடு நாராயணவலசு, திருமால் நகரை சேர்ந்தவர் அருக்காணி (80). இவரது கணவர் இறந்து விட்டார். அருக்காணிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு பேரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். அருக்காணி மட்டும் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் வழக்கம் போல் இரவில் வீட்டு கதவை மூடிவிட்டு அருக்காணி தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரெனஅருக்காணி வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த பெண் ஒருவர் அருக்காணியை தாக்கி அவர் காதில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கத்தோட பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருக்காணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தான் திருட்டு சம்பவம் நடந்தது தெரிய வந்தது.இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு அந்தப் பெண் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய உள்ளது.