ஆரணி அருகே தச்சூரில் உள்ள செய்யாறு ஆற்று படுகையில் மணல் குவியல்கள். கண்டு கொள்ளாத காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர்.
ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் 100க்கும் மேற்பட்ட மணல் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவற்றை கலைத்து ஆற்று மணலோடு சேர்த்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் 100க்கும் மேற்பட்ட மணல் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவற்றை கலைத்து ஆற்று மணலோடு சேர்த்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த தச்சூர் செய்யாற்று படுகையில் மணல் திருடர்கள் அமோகமாக மணலை கடத்திச்செல்கின்றனர். மேலும் பகல் நேரத்தில் மணலை ஜலித்து குவித்து வைத்துவிடுகின்றனர். இரவு நேரங்களில் டிராக்டர்களில் மணல் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு மணல் எடுத்து கமண்டல நாகநதிக்கரை மற்றும் செய்யாற்றில் சுமார் 10அடி ஆழத்திற்கு மணல் எடுத்துள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மழைக்கு பிறகு ஆற்றின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி அங்கிருந்த மணற்பரப்பால் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டது. சுற்றியுள்ள நிலங்களில் தென்னை உட்பட சாகுபடிகளுக்கு இந்த கமண்டல நாகநதி ஆதாரமாக உள்ளது. ஆற்றை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களால் கிராமங்களுக்கு குடிநீர் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. தற்போது அதிகப்படியான மணல் திருட்டால் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் அதிக அளவில் ஏற்படும் நிலை உள்ளது. தச்சூர் செய்யாற்றில் இருந்து வரும் நீரே ஆரணி பகுதிக்கு பாதியளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த ஆற்றில் நீர் தேங்கினால் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. ஆனால் சிலர் சுயலாபத்திற்காக மணலை திருடி விற்பனை செய்வதால் பல இடங்களில் ஆற்றில் மணல் சுரண்டப்பட்டு பாறைகளாக மாறியதால் தண்ணீர் தங்கவில்லை. அதிகாரிகள் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ஆற்றின் வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தச்சூர் செய்யாற்றுப்படுகையில் ‘மணல் குவியல்கள் சுமார் 100 யூனிட்டிற்கும் மேல் குவியல் குவியலாக ஜலித்து குவித்து வைத்துளளனர். மேலும் அருகே உள்ள தனியார் நிலங்களிலும் ஜலித்த மணலை சேமித்து வைத்து டிராக்டர், லாரிகளில் கடத்திச்செல்கின்றனர். இதனை பெரிய மணல் கொள்ளையர் கும்பல் சேர்ந்து செய்வதால் இவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாமல் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். இதனையும் மீறி சில தன்னார்வலர்கள் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று ஆரணி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். மேலும இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ஆரணி அடுத்த தச்சூர் செய்யாற்றுப்படுகையிலும் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது குறி்த்து பல முறை வருவாய் அதிகாரிகளிடமும், காவல் துறையினரிடமும் புகார் கொடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கனிம வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்றால் பின் வரும் காலங்களில் அதிக அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு தண்ணீருக்காக கையேந்தும் நிலை வரும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்றில் பெண்கள் மணலை ஜலித்து மணல் குவியலாக குவித்து வைக்கின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினாலும் மெத்தனமாக உள்ளனர். ஆகையால் குவிதது வைத்துள்ள சுமார் 100 யூனிட்டிற்கும் மேல் உள்ள மணலை கலைத்து டிராக்டர் ஆற்றில் செல்லாதவாறு பள்ளம் தோண்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.