யானைகள் நடமாட்டம்

திம்பம் மலைப்பகுதியில் இரவில் குட்டியுடன் சாலையின் நடுவே நின்று வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை;

Update: 2025-02-23 04:24 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், தாளவாடி, ஆசனூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என பார்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் திம்பம் மலைப்பகுதியிலும் இரவு நேரங்களில் குட்டியுடன் யானைகள் வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பகுதியில் வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று தனது குட்டி யானையுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் குட்டியுடன் யானை நிற்பதைக் கண்டு சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். கிட்டத்தட்ட 30 நிமிடம் அந்த ஒற்றை யானை தனது குட்டியுடன் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து சென்றனர். திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் தங்களது வாகனங்களை மலைப்பகுதியில் நிறுத்த வேண்டாம். யானைகளுக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

Similar News