நாகர்கோவிலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்பாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- பாரத ஸ்டேட் வங்கியின் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக 9 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரளா மாநிலம் மூணார் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த மாணவரின் பெற்றோரிடம் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார், பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.