மகளிர் சுய உதவிக் குழுக் கடன் பாக்கிக்காக வங்கிக்கணக்கை முடக்கினால் வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம் 

போராட்டம்;

Update: 2025-02-25 12:20 GMT
மகளிர் சுய உதவிக்குழு கடன் பாக்கிக்காக வங்கிக் கணக்கை முடக்குவது, மகளிர் உரிமைத் தொகை, நூறுநாள் வேலைத் திட்ட சம்பளம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனைகளில் பிடித்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டால் வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் புரட்சிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில தலைவர் அரங்க.குணசேகரன் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளது.  "மகளிர் சுய உதவிக் கடன் பெற்ற குழுவினரோ, உறுப்பினர்களில் ஒருவரோ உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததற்கு, மக்களிடம் போதிய வருமானம் இல்லாததும், எல்லாக் காலங்களிலும் வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். இதற்கு தீர்வு காண கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து, தவணைத் தொகையை எளிமைப் படுத்தி வசூலிக்க வேண்டும்.  மாறாக பெண்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகைக்காகவும், நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்திற்காகவும் வைத்துள்ள வங்கிக்கணக்கை முடக்குவது, கடன் வாங்கிய வங்கியில் கடனை வரவு வைக்கவில்லை என்பதற்காக, வேறு வங்கிக் கிளையின் வரவு-செலவு கணக்கை முடக்குவது, ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது.  ஏழைப் பெண்களிடம் காட்டும் இத்தகைய கெடுபிடிகளை, நெருக்கடிகளை, கார்ப்பரேட் முதலாளிகளிடம் காட்டாதது ஏன் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் வங்கிகளின் மக்கள் விரோதச் செயலைக் கண்டித்து, மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒன்றிணைத்து வங்கிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News