ஊரணிபுரத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் சம்பள பாக்கியை கேட்டு ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு மூன்று மாத கால சம்பள பாக்கியை உடனடியாக வழங்கக் கோரியும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவோணம் ஒன்றியக்குழுக்கள் சார்பில் ஊரணிபுரம் இந்தியன் வங்கி கிளை அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராசு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.சின்னப்பா, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ் குமார், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.ராமசாமி, வித்யா மற்றும் வி.ச, வி.தொ.ச, மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், "100 நாள் வேலையை 200 நாளாகவும், கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களை கௌரவமாக நடத்த வேண்டும். கிடப்பில் கிடக்கும் தொழிலாளர் நல வாரியத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும். கேரளாவைப் போல் காங்கிரீட் வீட்டுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.