ராமநாதபுரம் தரைப்பாலம் கேட்டு மக்கள் கோரிக்கை
கமுதியிலிருந்து முதுகுளத்தூர் செல்ல கமுதி குண்டாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து முதுகுளத்தூர் செல்ல மூன்று கிலோமீட்டர் சுற்றி கோட்டைமேடு, களஞ்சியம் நகர் சென்று அங்கிருந்து முதுகுளத்தூர் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உலக நடை, சேகநாதபுரம், கிடாரிகுளம், கருங்குளம், பாக்குவெட்டி, பேரையூர், மருதங்கநல்லூர், ஆனையூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளி நேரத்தில் முறையான பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், கமுதிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நேர விரையத்தை குறைக்க மாணவர்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோகளில் கோட்டைமேடு களஞ்சியம் நகர் விலக்கு சாலையிலிருந்து குண்டாறு வழியாக கமுதி தெற்கு முதுகுளத்தூர் சாலையில் ஆபத்தான முறையில் காலை, மாலை வேளைகளில் பயணித்து வருகின்றனர். கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள இந்த சாலை வழியாக மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ, மாணவிகளின் நலன் கருதி களஞ்சியம் நகர் விலக்கு சாலையிலிருந்து கமுதி தெற்கு முதுகுளத்தூர் சாலைக்கு குண்டாறு வழியாக தரைப்பாலம், மற்றும் தார் சாலை அமைத்து தர வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.