குமரி வக்கீல்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு - நாளை உண்ணாவிரதம்
கன்னியாகுமரி;
வழக்கறிஞர் சட்ட திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், ஜனநாயக விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையோ வழக்கறிஞர்களையோ இந்தியாவில் எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது, மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சேமநல நிதியினை 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) நீதிமன்ற புறக்கணிப்பு, 28ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று குமரி மாவட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 1,500 வக்கீல்கள் புறக்கணிப்பு செய்தனர். இதுபோல் இரணியல், பத்மநாபபுரம், குழுத்துறை, பூதப்பாண்டி நீதிமன்றங்களின் வக்கீல்கள் புறக்கணிப்பு செய்தனர். நாளை 28ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றம் முன்பும் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.