பாபநாசம் அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே ராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணி (55). விவசாயி. இவரது மனைவி அன்புமணி (தற்போது 58 வயது) தனது கணவா் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்தது. இந்நிலையில் 2017, அக்டபோா் 6- ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தூங்கிய மணி மீது காய்ச்சிய சமையல் எண்ணெய்யை அன்புமணி ஊற்றினாா். இதனால், பலத்த காயமடைந்த மணி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இது குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அன்புமணியைக் கைது செய்தனா். இது தொடா்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. ராதிகா விசாரித்து அன்புமணிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.