சங்கரன்கோவிலில் பள்ளி குழந்தைகளுக்கு நிதி வழங்கிய எம்எல்ஏ
பள்ளி குழந்தைகளுக்கு நிதி வழங்கிய எம்எல்ஏ;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வட்டம் மலையடிப்பட்டியை சோ்ந்தவா் மகேந்திரன்( 39) விவசாயி. இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள்கள் பொன் ஸ்ரீ(10), பொன்மலா் (8), மகன் பொன்மாறன்(4) ஆகியோரோடு வசித்து வந்தாா். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பொன்மாறனுக்கு கழுத்தில் கட்டி இருப்பதை சரி செய்வதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் லிம்போபா என்ற ஒரு வகையான புற்றுநோய் இருப்பதை அறிந்து அதற்கு முதல் கட்ட சிகிச்சை அளித்தனா். கடந்த பிப்.12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பொன்மாறன் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினா்கள் மற்றும் கிராமத்தினா் மருத்துவமனையில் உயிரிழந்த பொன்மாறனின் உடலை வாங்க மறுத்து 2 நாள்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, திருநெல்வேலி அரசு மருத்துவமனக்கு சென்று உயிரிழந்த பொன்மாறனின் குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பொன் மாறனின் சகோதரிகளின் படிப்பு செலவிற்காக தன் சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் தருவதாக உறுதியளித்தாா். இதையடுத்து சிறுவனின் உடலை அவா்களது உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.