திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில்

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போட்டி;

Update: 2025-03-07 03:19 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. நாகை மாவட்ட இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு, கல்வி தன்முனைப்பு திட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின், சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவை இணைந்து நெகிழியை அள்ளு, பரிசினை வெல்லு என்ற தலைப்பில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி ப.கொந்தகை மதாரியா உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் கடந்த 2 வாரங்களாக, தங்கள் இல்லங்களில் சேகரித்த நெகிழி உறைகளை நெகிழி புட்டிகளில் அடைத்து கொண்டு வந்திருந்தனர். அவை அனைத்தும் எடைப் போடப்பட்டு எடை அதிகமாக கொண்டு வந்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும், காகிதப்பையும் வழங்கப்பட்டன. திறந்த வெளி குப்பைத் தொட்டியில் நெகிழிப் பைகளை வீசாமல், இவ்வாறு புட்டிகளில் அடைத்து குப்பைத் தொட்டியில் போடுவதால் கால்நடைகள் அவற்றை உண்ணாமல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.துப்புரவு பணியாளர்களும் சிரமமின்றி நெகிழி குப்பைகளை அகற்ற முடிகிறது. மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நெகிழி புட்டிகள் மறு பயன்பாடு முறையில், பூந்தொட்டி போன்ற பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் அஜய் மற்றும் கயல் ஆகியோர் சூழலியல் சுற்றுல்லாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அனிட்டா ஹேனா எலிசெபெத் செய்திருந்தார்.

Similar News