தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கிளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இனயம் புத்தன் துறை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது ஏணி. கொண்டு சென்ற போது மின் கம்பியில் ஏணி உரசியதால் மின்சாரம் தாக்கி மரிய விஜய் (52), ஜஸ்டஸ் (39), அருள் சோபன் (45), மைக்கேல் பின்றோ (40) ஆகிய நான்கு பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரும் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்த நான்கு பேரும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். இந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி வழங்க கேட்டுக் கொள்வதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு சொந்த குடியிருப்பு இல்லாத காரணத்தால் தற்போது வரை வாடகை வீடுகளில் வசித்து வருகிறார்கள். எனவே மேற்படி குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், நான்கு பேர்களின் குடும்பங்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும் வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.