திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-11 17:37 GMT
அரியலூர்,மார்ச்.11- அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. சிவத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததும், சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், நந்தியம்பெருமாள் சுயசாம்பிகை தேவியரும் திருமணம் கொண்டருளியதுமானதும், ஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிப்பட்ட தலமான திருமழபாடி அருள்மமிகு வைத்தியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு ஆதிஷேச வாகனம்,பூதவாகனம், கைலாச வாகனம், இடப வாகனம்,யானை வாகனம் போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அரசு அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட ஏரளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிவழியாகச் சென்று நிலையை அடைந்தது. சிறிய தேரில் விநாயகர், வள்ளி தெய்வான சமேத முருகன், அம்பாள் மற்றும் சண்டீகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கங்கைகொண்ட சோழபுரம்..... அதேபோல், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் தினமும் யாக பூஜைகள், இரவு பாராயணம் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சோழீஸ்வரர் ஸ்ரீபாத வழிபாடு குழுமம், காஞ்சி காமகோடி அன்னாபிஷேக கமிட்டி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News