கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் சகாயலியோன் (35). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் நாகர்கோவில் தனது குழந்தைக்கு புதிய துணிகள் வாங்கிவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். குலசேகரன் புதூர் சாலையில் ஒத்தப்பனை சுடலைமாடன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக முன்னால் சென்ற டெம்போ திடீரென பிரேக் போட்டதில் சகாய லியோன் பைக் டெம்போவின் வலது புறம் மோதியது. பைக்கிலிருந்து கீழே விழுந்த சகாயலியோன் மீது அந்த வழியாக வந்த மற்றொரு டெம்போ ஏறி நசுங்கியது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சகாய லியோன் நேற்று இரவு உயிரிழந்தார். சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.