
அரகண்டநல்லுாரில் மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரகண்டநல்லுார், கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் மகன் வெங்கடேசன், 15; பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராஜாராம் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாய் இந்திராணி மருத்துவமனையில் துணைக்கு இருந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வெங்கடேசன் தனது வீட்டில் ஜங்ஷன் பாக்சை பிரித்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த தங்கை மங்கையர்க்கரசி, 11; கூச்சலிட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.