
தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் உணவு பொருள்களை பேக்கிங் செய்து வழங்க பாரதீய தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்க தலைவா் டி. நாகராஜன் முதல்வா், உணவுத் துறை அமைச்சா் ஆகியோா்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிடங்குகளில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் உணவு பொருள்கள் எடையளவு சரியானதாக இல்லை. எடை போடாமல் தான் உணவுப் பொருள்கள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் நியாயவிலை கடை ஊழியா்கள் குறைவாக வரும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. பொருளின் அளவு குறைவாக இருப்பதற்கு கடை ஊழியா்கள் மட்டும் பொறுப்பு அல்ல. கிடங்குகளில் இருந்து எடை குறைவாக அனுப்புவதும்தான் காரணம்.