
குமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பன்றிகளுக்கு உணவுக்காக கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. இதில் மீதமான கழிவுகளை பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்ந்து ஆறுகள் நீரோடைகளில் கொட்டப்படுவதால் இவற்றை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது மாற்று திட்டமாக கழிவுகளை மலையோர கிராமங்களில் ஜேசிபி மூலம் குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். இந்த கழிவுகள் கன மழை பெய்யும் போது மண் கரைந்து, வெளியேறி அருமனை பகுதிகளில் உள்ள படப் பச்சை, காரோடு, ஐந்துள்ளி பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வந்து கலக்கிறது. இதற்கு இடையில் இந்த நீரோடைகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. ஆகவே அந்த கழிவுகள் ஆற்றில் கலந்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இடைக்குழி பகுதியை சேர்ந்த ஜெயன் என்பவர் மனைவி தன்யா (30) என்பவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில் கழிவுகள் படிந்துள்ளதால் 30 ரப்பர் மரங்கள் பட்டுப் போய் விட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் ரப்பர் தோட்டங்களில் 100 ஏக்கருக்கு மேல் கழிவுகள் பதிந்து விட்டதாகவும், ரப்பர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து அருமனை போலீசார் கூறுகையில் கழிவுகள் தேங்கிய பகுதிகளில் மண் பரிசோதனைக்கு எடுத்துச் சென்று அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.