கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுத்த வலியுறுத்தி தருமபுரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒரு கோடி வாடிக்கையாளர்களை கொண்டு தொழில் நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் புதிய பாக்ஸ்களை கொள்முதல் செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தனியார் பாக்ஸ்களை எடுத்துவிட்டு வாடிக்கையாளர்களுக்கு அரசு பாக்ஸை வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சொல்வதைக் கேட்க மறுக்கும் ஆப்பரேட்டர்களுக்கு பதிலாக புதிய ஆப்ரேட்டர்களுக்கு உள்ளூர் உரிமம் கொடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பாக்சுகளுக்கு பதிலாக அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாவட்ட தலைவர் சேட்டு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன் முன்னிலையில் மனு அளித்தனர். அரசு அதிகாரிகள் சொல்வதை கேட்க மறுக்கும் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக செயல்படும் கேபிள் டிவி அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ள பென்னாகரம் பாலக்கோடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்ட புதிய கேபிள் டிவி ஆபரேட்டர் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை வைத்தனர். தங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை அடுத்த கட்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.